ரூ.2 லட்சம் கோடி முதலீடுக்கு 270 ஒப்பந்தங்கள்: அமைச்சர் ராஜா
ரூ.2 லட்சம் கோடி முதலீடுக்கு 270 ஒப்பந்தங்கள்: அமைச்சர் ராஜா
ADDED : ஜன 03, 2026 02:50 AM

சென்னை:''கடந்த, 2025ல் மட்டும், 2.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 270க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது, 'எக்ஸ்' தள பதிவு:
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வேலைவாய்ப்புகளாகவும், முந்தைய திட்டங்களை புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்திய ஆண்டாக, 2025 அமைந்திருந்தது.
கடந்தாண்டில் மட்டும், 2.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 270க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவை, 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட வழிவகுத்தன.
தென்காசி, மதுரை, திருவாரூரில் முதல்முறையாக, 'சிப்காட்' நிறுவன தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் துவங்கின. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை, விண்வெளி தொழில் கொள்கை, பொம்மை தொழில் கொள்கை ஆகியவை வெளியிடப்பட்டன. மின்னணு பாகங்கள் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், 50க்கும் மேற்பட்ட சர்வதேச திறன் மையங்கள் துவக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

