சிறுதொழில் ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழக அரசு நிறுவனம் ஒப்பந்தம் 12 மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டு
சிறுதொழில் ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழக அரசு நிறுவனம் ஒப்பந்தம் 12 மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டு
UPDATED : ஜன 02, 2026 01:40 AM
ADDED : ஜன 02, 2026 01:29 AM

சென்னை:தமிழகத்தில் உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, 500 சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, நாடு முழுதும் உள்ள, 12 மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன், தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வாயிலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் உள்ள இடைவெளியை குறைப்பது, வேளாண் விளைபொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது போன்ற பணிகளில், தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் டி.என்.எபெக்ஸ் எனப்படும், தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், உலக வங்கியின், 27 கோடி ரூபாய் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டிற்குள், 500 சிறு, குறு உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக அந்நிறுவனம், 12 மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒப்பந்த த்தில் இணைந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் மீன், இறைச்சி, அரிசி, பழங்கள், சிறுதானியங்கள் என, உணவு பொருட்களின் உற்பத்தி நன்கு உள்ளது.
அவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு, பல நாடுகளில் தேவை உள்ளது. அதேசமயம், சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கும் தொழில்நுட்பம், பேக்கிங், சந்தைப்படுத்துவது குறித்து பல சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தெரிவதில்லை.
எனவே, அந்நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை வழங்குவதற்காக, தேசிய அளவில் முன்னணியில் உள்ள, 12 கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

