'35சதவிகிதம் ஜி.எஸ்.டி.,யால் வரி ஏய்ப்பு அதிகரிக்கும்' சில்லரை வணிகர்கள் கூட்டமைப்பு கருத்து
'35சதவிகிதம் ஜி.எஸ்.டி.,யால் வரி ஏய்ப்பு அதிகரிக்கும்' சில்லரை வணிகர்கள் கூட்டமைப்பு கருத்து
ADDED : டிச 13, 2024 12:47 AM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., அடுக்குகளில் 35 சதவீதம் என்ற அதிகபட்ச பிரிவை நிர்ணயிக்கும் பரிந்துரையை நிராகரிக்குமாறு, மத்திய அரசு மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு, இந்திய சில்லரை வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுதும் தற்போது பல்வேறு பொருட்களுக்கு 5, 12 மற்றும் 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி., சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும்; புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் உட்பட 148 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து, வரும் டிச., 21ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் நடைபெறும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றம் மேற்கொள்வது, எளிமையான வரி விதிப்புக்காக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி.,யின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறானது.
மேலும், இது சில்லரை விற்பனையாளர்களின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும்.
இந்த நடவடிக்கை, இந்திய உற்பத்தியாளர்களின் செலவில், மலிவு விலை சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீன தயாரிப்பாளர்களுக்கு பலன் அளிப்பதாக அமையும்.
புகையிலை பொருட்கள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானம் ஆகியவற்றுக்கு 35 சதவீதம் வரி விதிப்பது, அவற்றுக்கான சட்டவிரோத சந்தையை வளர்க்கும்.
ஏற்கனவே, ஆன்லைன் நிறுவனங்களின் வளர்ச்சியால், பாரம்பரிய இந்திய சில்லரை விற்பனை கடைகள் அழிந்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி., விகிதத்தை அதிகரிப்பது, சில்லரை வணிகத்தை அழிப்பதாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.