தென்னை நார்பொருட்கள் தரத்தை பரிசோதிக்க ரூ.4 கோடியில் ஆய்வகம்
தென்னை நார்பொருட்கள் தரத்தை பரிசோதிக்க ரூ.4 கோடியில் ஆய்வகம்
ADDED : மார் 19, 2024 10:32 PM

சென்னை:தென்னை நாரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை பரிசோதிக்க, கோவை, காளாப்பட்டி, 'சிட்கோ' தொழிற்பேட்டையில், 4 கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் கட்டும் பணியை, தமிழக அரசின் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் துவக்கியுள்ளது.
தமிழகத்தில் தென்னை விளைச்சல் அதிகம் உள்ளது. தேங்காய் மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தென்னை நார், தென்னை நார் துகளில் இருந்து தரைவிரிப்பு, தென்னை நார் வலை பின்னல் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார் துகள் கட்டியின் பயன்பாடு அதிகம் உள்ளது. அந்நாடுகள், தரமான பொருட்களை மட்டும் வாங்குகின்றன.
இந்தியாவில், கயிறு பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டும் உள்ளன.
இதனால், தமிழகத்தில் கயிறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அம்மாநில ஆய்வகங்களுக்கு தயாரிப்புகளை அனுப்புகின்றன.
இதனால், செலவு அதிகரிப்பதுடன், நேரமும் விரயமாகிறது.
எனவே, தமிழக தென்னை நார் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் ஆய்வகம் அமைக்க திட்டமிட்டது. அங்கு அமைப்பதை, தொழில்முனைவோர்கள் விரும்பவில்லை.
இதையடுத்து, கோவை, காளப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில், 4 கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைக்கும் பணி இம்மாத துவக்கத்தில் துவங்கியுள்ளது.
மொத்தம், 3,000 சதுர அடியில் தரை மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்படும் ஆய்வகத்தில், அதிநவீன ஆய்வு கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இதனால், கயிறு தயாரிப்பு நிறுவனங்கள், குறைந்த செலவில் தரமான பொருட்களை தயாரித்து, பரிசோதித்துக்கொள்ளலாம்.

