காஞ்சிபுரம், திருநெல்வேலியில் 5 'சிட்கோ' தொழிற்பேட்டை ரெடி
காஞ்சிபுரம், திருநெல்வேலியில் 5 'சிட்கோ' தொழிற்பேட்டை ரெடி
ADDED : ஜன 10, 2025 01:58 AM

சென்னை, ஜன. 10-
தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் தொழில்களை துவக்க வசதியாக, பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் தொழிற்பேட்டை, 42 ஏக்கரிலும்; கடலுார் காடாம்புலியூர், 29 ஏக்கர்; துாத்துக்குடி லிங்கம்பட்டி, 60 ஏக்கர்; திருவாரூர் வண்டாபாளை, 19 ஏக்கர்; திருநெல்வேலி முத்துார், 33 ஏக்கரிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய தொழிற்பேட்டைகளில் உள்கட்டமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மனைகளுக்கு சிறு, குறு தொழில்முனைவோர் வாங்கும் விலையில், விலை நிர்ணயம் செய்யும் பணி நடக்கிறது; இதற்கு, சிட்கோ இயக்குனர் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் மனைகள் ஒதுக்கும் பணியை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.

