தமிழக கடல்பகுதியில் 500 மெகாவாட் காற்றாலை மத்திய அரசு செயலர் தகவல்
தமிழக கடல்பகுதியில் 500 மெகாவாட் காற்றாலை மத்திய அரசு செயலர் தகவல்
ADDED : அக் 23, 2024 10:19 PM

சென்னை, அக். 24-
''தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில், 500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையம் அமைக்க, 2025ல் 'டெண்டர்' கோரப்பட உள்ளது; இதற்கான மதிப்பீடு பணிகள் துவங்கி உள்ளன,'' என, மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை கூடுதல் செயலர் சுதீப் ஜெயின் தெரிவித்தார்.
இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர் சங்கம் மற்றும் 'பி.டி.ஏ., வெஞ்சர்ஸ்' நிறுவனம் சார்பில், நாட்டின் முதன்மையான காற்றாலை எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடான, 'விண்டர்ஜி இந்தியா 2024' சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
இதில், காற்றாலை மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில், 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட காற்றாலை தொழில் துறையினர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலர் சுதீப் ஜெயின் பேசியதாவது:
உலகில் காற்றாலை மின் நிலையங்களை அதிகம் நிறுவியதில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டில் வரும் 2030க்குள் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை, 5 லட்சம் மெகாவாட்டாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்., வரை, 2 லட்சம் மெகாவாட் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காற்றாலைகளை பொறுத்தவரை, ஒரு லட்சம் மெகாவாட்டிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 47 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை, விரைவாக எட்டப்படும்.
தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க, அடுத்த ஆண்டு டெண்டர் கோரப்படும். காற்றாலை மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் மையமாக, இந்தியா திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.