ADDED : அக் 18, 2024 12:01 AM

புதுடில்லி:உலகளவில் தேவை அதிகரிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்திய காபி ஏற்றுமதி 55 சதவீதம் உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியான, ஏப்ரல் - செப்டம்பரில், இந்திய காபி தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, நாட்டின் காபி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இந்திய காபி வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் முதல் பாதியில், 4,956 கோடி ரூபாயாக இருந்த காபி ஏற்றுமதி, 55 சதவீதம் அதிகரித்து, நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் 7,772 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
புள்ளியியல் தரவுகளின்படி, அளவின் அடிப்படையில் நடப்பு 2024 - 25ம் நிதியாண்டின் முதல் பாதியில், 15 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 2.20 லட்சம் டன் காபியை, இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது கடந்தாண்டில், 1.91 லட்சம் டன்னாக இருந்தது. சர்வதேச சந்தைகளில் இருந்த தேவை அதிகரிப்பின் காரணமாக, இந்திய ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
காபி ஏற்றுமதியுடன், அதன் கொள்முதல் விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கிலோ, 259 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை, தற்போது 352 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் காபி உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.