ADDED : அக் 05, 2024 12:48 AM

புதுடில்லி:கடந்த ஜூலை - செப்டம்பர் காலத்தில், டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், வீடுகள் விற்பனை சராசரியாக 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'நைட் பிராங்க் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'அனராக், பிராப் ஈக்விட்டி' ஆகிய நிறுவனங்களின் அறிக்கையில், முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நைட் பிராங்க் இந்தியா நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த ஜூலை - செப்டம்பரில் மொத்த வீடுகளின் விற்பனை சராசரியாக 5 சதவீதம் அதிகரித்து, 87,108 ஆக உள்ளது. இதுவே, நடப்பாண்டின் ஒரு காலாண்டில் அதிகபட்ச விற்பனையாகும். 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பிரீமியம் வீடுகளுக்கான தேவை வலுவாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.
மலிவு விலை வீடுகள் பிரிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த வகை வீடுகளின் எண்ணிக்கை குறைவாகவும்; விலை சற்று அதிகரித்தும் காணப்படுவதால், விற்பனை சரிந்துள்ளது.
டில்லியைத் தவிர மற்ற ஏழு நகரங்களிலும் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது; டில்லியில் 7 சதவீதம் சரிந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.