UPDATED : ஜன 13, 2024 11:50 AM
ADDED : ஜன 08, 2024 11:13 PM
கோல்கட்டா: வருகிற 2047ம் ஆண்டுக்குள், நதி நீர் கப்பல் சுற்றுலா மற்றும் பசுமை கப்பல்களின் மேம்பாட்டிற்காக, 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, மத்திய அமைச்சர் சர்பானந்த சேனாவால் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், உள்நாட்டு நீர் வழி மேம்பாடு கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கலந்துகொண்டு கூறியதாவது: வருகிற 2047ம் ஆண்டுக்குள், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை இரண்டு லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது. இதையடுத்து, நதி நீர் கப்பல் சுற்றுலா பயணத் திட்டத்திற்காக 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் பசுமை கப்பல் போக்குவரத்திற்காக, 1,000 கப்பல்கள் மற்றும் படகுகள் தயாரிக்க, 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதென தீர்மானித்துள்ளது. மொத்தமாக, 2047ம் ஆண்டிற்குள், 60,000 கோடி ரூபாய் இத்துறைகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீடுகள் பொது மற்றும் தனியார் துறையின் கூட்டு முதலீட்டு திட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.