ADDED : ஏப் 24, 2025 11:40 PM

சென்னை:''வரும் 2030ல், தோல் பொருட்கள் மற்றும் காலணி துறைகளில் வேலைவாய்ப்பு, 65 லட்சமாக அதிகரிக்கும்,'' என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்து உள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர்., - சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின், 78வது நிறுவன தினம், சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.
இதில், கோலாப்பூர் கைவினைஞர்களுக்கு, புதிய வடிவமைப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க, சி.எல்.ஆர்.ஐ., - மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர், காலாபுரி அறக்கட்டளை இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், கவுன்சிலின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசியதாவது:
வரும் 2030ல், தோல் மற்றும் காலணி தொழில் வருவாய், 4.30 லட்சம் கோடி ரூபாயாகவும்; வேலைவாய்ப்பு, 65 லட்சமாகவும் அதிகரிக்கும். தற்போது, 45 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு தெரிவித்தார்
ஒப்பந்தம் குறித்து, சி.எல்.ஆர்.ஐ., இயக்குநர் ஸ்ரீராம் கூறியதாவது:
'கோலாபுரி' காலணி என்பது, புவிசார் குறியீடு பெற்றது. இது, கர்நாடகா, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள சில கிராமங்களில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. தோல் பதனிட அதிக காலம் பிடிக்கும் என்பதால் தயாரிப்புக்கும் அதிக நாட்கள் ஆகும்.
மேலும் வடிவம் உள்ளிட்டவற்றிலும் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பழைய சிகப்பு கலரில் தான் தயாரிக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தம் வாயிலாக மீண்டும் பயிற்சி அளித்து, தற்போது கிடைக்கும் தோலில் இளைஞர்கள் விரும்பும் வகையில், புதிய வண்ணங்களில் தரமான காலணி தயாரிப்பது தொடர்பாக, சி.எல்.ஆர்.ஐ., பயிற்சி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

