UPDATED : அக் 24, 2025 10:48 AM
ADDED : அக் 24, 2025 03:23 AM

புதுடில்லி: நடப்பாண்டு இதுவரை பண்டிகை நாட்களில், வரலாறு காணாத அளவில் 6.5 முதல் 7 லட்சம் பயணியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படும். ஆனால், பண்டிகை நாட்கள் துவங்கிய அதே நாளில் புதிய ஜி.எஸ்.டி., அமலானது, கார் விற்பனையை இரு மடங்காக அதிகரித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி, இந்த பண்டிகை காலத்தில் மட்டும் 3.5 லட்சம் கார்களை விற்பனை செய்து, ஒரு நாளைக்கு சராசரியாக, 13,500 கார்களை வினியோகித்து உள்ளது. பண்டிகை காலத்தில் மட்டும் மொத்தம், 4.5 லட்சம் மாருதி கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை, 33 சதவீதம் உயர்ந்து, 1 லட்சம் கார்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெக்ஸான் காரின் விற்பனை, 73 சதவீதம் உயர்ந்து, 38,000 கார்களையும், பன்ச் காரின் விற்பனை, 29 சதவீதம் உயர்ந்து, 32,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. டாடா மின்சார கார்களின் விற்பனை, 37 சதவீதம் அதிகரித்து, 10,000 கார்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம், பண்டிகை நாட்கள் துவங்கியது முதல் ஒரு நாளைக்கு 2,500 கார்களை வினியோகம் செய்ததாகவும், 3,500 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மஹிந்திரா, கியா, டொயோட்டா ஆகிய நிறுவனங்கள், 1 முதல் 1.5 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளன.
கார் வாங்க வாடிக்கையாளர்கள் அலைமோதியதால், கார் டீலர்கள் வேலை நேரத்தை நீட்டித்ததாக தெரிவித்துள்ளனர். எனவே, கார் தேவை எதிர்பாராத வகையில் அதிகரித்ததால், வினியோக லாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
* ஒரு மாதத்தில் 7 லட்சம் பயணியர் கார்கள் விற்பனை.
* அதிகபட்சமாக மாருதி சுசூகி 4.50 லட்சம் கார் விற்பனை.
* டாடா 1 லட்சம், ஹூண்டாய், மஹிந்திரா, கியா, டொயோட்டா மொத்தம் 1.50 லட்சம் கார் விற்பனை.
* கார் தேவை எதிர்பாராத வகையில் அதிகரித்ததால், வினியோக லாரிகளுக்கு பற்றாக்குறை.

