ராணுவ உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 74% வெளிநாட்டு முதலீடு அனுமதி மத்திய பாதுகாப்பு துறை செயலர் பேச்சு
ராணுவ உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 74% வெளிநாட்டு முதலீடு அனுமதி மத்திய பாதுகாப்பு துறை செயலர் பேச்சு
ADDED : டிச 30, 2024 12:48 AM

கோவை:''ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள், உதிரி பாகங்கள் உற்பத்திக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு தொழில்நுட்பங்களை, 74 சதவீதம் வரை பெற அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
கோவையில், கொடிசியா புதுமை படைப்பு சிடிக் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் மையத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கிற்குப் பின், தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. உதிரி பாகங்களை இந்தியமயமாக்கல், புதியவற்றை கண்டுபிடித்தல், ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், அதில் எழும் சிக்கல்கள் தொடர்பாக, பாதுகாப்பு துறை செயலரிடம் தொழில்துறையினர் விளக்கினர்.
இதையடுத்து, பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் பேசியதாவது:ராணுவ உதிரி பாகங்கள் இந்தியமயமாக்கலுக்கு வெளிநாடுகளுடன், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், 74 சதவீதம் வரை நேரடியாக வெளிநாட்டு முதலீடுகள், தொழில்நுட்பங்கள் இருக்கலாம். இதற்கு மேலும் செல்ல, அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், இவற்றில் 60 சதவீதம் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்பட வேண்டும். சுயசார்பு இந்தியா என்ற அடிப்படையில், பொருட்களை உற்பத்தி செய்யவும், பொருட்களை மேம்படுத்தவும், தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

