கடன் வட்டி 9 சதவீதத்தை தாண்டினால் வீடு வாங்குவதை கைவிட 87 சதவீதம் பேர் முடிவு 'பிக்கி, அனராக்' ஆய்வில் தகவல்
கடன் வட்டி 9 சதவீதத்தை தாண்டினால் வீடு வாங்குவதை கைவிட 87 சதவீதம் பேர் முடிவு 'பிக்கி, அனராக்' ஆய்வில் தகவல்
ADDED : அக் 21, 2024 12:54 AM

புதுடில்லி:வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க நினைப்பவர்களில் பெரும்பாலானோர், வட்டி 9 சதவீதத்தை தாண்டினால், வீடு வாங்கும் முடிவை மறுபரிசீலனை செய்வர் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை அமைப்பான 'பிக்கி' மற்றும் கட்டுமானத் துறை நிறுவனமான 'அனராக்' இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
அவற்றில் வெளியான முடிவுகள் வருமாறு:
வீட்டுக்கடன் வட்டி தற்போது சராசரியாக 8.50 சதவீதமாக இருக்கிறது. அது 9 சதவீதத்தை தாண்டினால், வீடு வாங்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என, ஆய்வில் பங்கேற்றவர்களில் 87 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
வட்டி விகிதம் 8.50 சதவீதத்தை ஒட்டி நீடித்தால், வீட்டுக்கடன் பெறும் தங்கள் முடிவு மாறாது என 71 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
8.50 சதவீதம் முதல் 9 சதவீதத்துக்குள் வட்டி இருந்தாலும், வீடு வாங்க பரிசீலிக்கப் போவதாக 54 சதவீதம் பேர் கூறினர். முதலீடுகளிலேயே ரியல் எஸ்டேட் சொத்து முதன்மையானது என 59 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வீடு வாங்க விரும்புவதாக 67 சதவீதம் பேர் தெரிவித்த நிலையில், 45 லட்சம் - 90 லட்சம் ரூபாய் விலையுள்ள வீடு வாங்க விரும்புவதாக 35 சதவீதத்தினர் தெரிவித்தனர். 90 லட்சம் - 1.25 கோடி ரூபாய் விலையில் வீடு வாங்குவதே இலக்கு என 28 சதவீதம் பேர் கூறினர்.
கட்டுமான திட்டங்கள் குறித்த காலத்தில் முடித்து தரப்பட வேண்டுமென 98 சதவீதம், கட்டுமானத் தரத்தை அதிகரிக்க வேண்டும் என 93 சதவீதம், நல்ல காற்றோட்டம், வெளிச்சமான கட்டுமானம் அவசியம் என 72 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.