இந்திய நிறுவனங்களுக்காக பிரத்யேக தரவு சேமிப்பு தளம்
இந்திய நிறுவனங்களுக்காக பிரத்யேக தரவு சேமிப்பு தளம்
ADDED : மார் 13, 2024 12:25 AM

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள் குறித்த தரவு சேமிப்பு தளம் ஒன்றை, மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பொது மற்றும் தனியார் கூட்டணி வாயிலாக, புதுமைகளை ஊக்குவிக்க, 10,372 கோடி ரூபாய் செலவில், இந்தியா ஏ.ஐ., திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்தியா ஏ.ஐ., திட்டத்தின் கீழ், ஸ்டார்ட்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான தரவு சேமிப்பு தளம் ஒன்றை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளதாவது:
சாட்ஜிபிடி, ஓப்பன் ஏ.ஐ., போன்று, இந்தியாவுக்கென தனி ஒரு ஏ.ஐ., மாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்திய மொழிகள் மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு உள்நாட்டு ஏ.ஐ., மாடலை உருவாக்குவதற்கு, இந்தியா ஏ.ஐ., திட்டம் வழிவகுக்கும். சுகாதாரம், வேளாண்மை, கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு, இந்தியா சார்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் உருவாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்க, தரவு தொகுப்புகள் முக்கியமானதாக உள்ளது. எனவே, தரவு சேமிப்பு தளம், ஸ்டார்ட்அப் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும். இத்தளம், அன்னிய நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

