ADDED : நவ 14, 2025 12:42 AM

சர்வதேச அளவில் அசாதாரண சூழல் நிலவினாலும், இந்திய ரூபாய் மதிப்பு உறுதியாக நிலைத்திருப்பது கவனம் பெறுகிறது.
அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுகளில், புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. இதனால் சந்தையின் போக்கு மேம்பட்டுள்ளது.
இதேவேளையில், அமெரிக்க டாலர் குறியீடு 0.20 சதவீதம் குறைந்து, 99.10 என இரு வாரங்களில் இல்லாத குறைந்த நிலைக்கு வந்தது.
முடக்கப்பட்ட அந்நாட்டின் அரசு மீண்டும் துவங்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களிலிருந்து விலகி, பங்குகள், கமாடிட்டி, நாணய சந்தை ஆகியவற்றிற்கு மாறியுள்ளனர். இதனால், இந்திய ரூபாய்க்கு மறைமுக ஆதாயம் கிடைக்கக்கூடும்.
உள்நாட்டைப் பொறுத்தவரை, பங்குச் சந்தைகள் உற்சாகமாகக் காணப்பட்டன.
நிறுவனங்களின் வலுவான நிதிநிலை அறிக்கை, ஜி.எஸ்.டி., குறைப்பால் உள்நாட்டு தேவை அதிகரிப்பு, அரசு மூலதன செலவு திட்டங்கள், ரிசர்வ் வங்கியின் ஆதரவு, ஏற்றுமதி ஊக்க திட்டம் ஆகியவை சந்தையை துாண்டுகின்றன.
கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்ததால், இந்தியாவின் இறக்குமதி செலவு குறைந்து ரூபாய் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கிறது.
கணிப்பு: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 88.40-ல் முக்கிய ஆதரவு கொண்டுள்ளது. சாதகமான சூழல் தொடர்ந்தால், ரூபாய் மதிப்பு மேலும் வலுப்பெறக்கூடும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் பட்சத்தில் 88.70லிருந்து 88.80 வரை தடுப்பு நிலையாக உள்ளது.

