ஆயிரம் சந்தேகங்கள்: என்னுடைய வயதை காரணம் காட்டி ரூபே கடன் அட்டை வழங்க மறுப்பது எப்படி சரி?
ஆயிரம் சந்தேகங்கள்: என்னுடைய வயதை காரணம் காட்டி ரூபே கடன் அட்டை வழங்க மறுப்பது எப்படி சரி?
ADDED : ஏப் 22, 2024 12:36 AM

கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தினேன். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மூன்று முறை வரி கட்டிவிட்டு, பின்னர் ரீபண்டும் வாங்கினேன். ஆனால், இப்போது அந்தப் பணத்தை மீண்டும் வருமான வரித் துறை கேட்கிறது விளக்கம் சொன்னபிறகும் 16,000 செலுத்தச் சொல்கிறது. யாரிடம் போய் என் குறையைச் சொல்வது?
எஸ்.வெங்கடேஷ், சென்னை.
சென்னையில், வாடிக்கையாளர் குறைதீர் மையம் இயங்குகிறது. chennai.ito.hq.pro@incometax.gov.in எனும் இந்த இமெயிலுக்கோ, அல்லது 044-28338383 விரிவு 6801 என்ற தொலைபேசி எண்ணுக்கோ பேசி, உங்கள் குறையைத் தெரிவியுங்கள்.
தேவைப்பட்டால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருவான வரி அலுவலகத்துக்குப் போய் பாருங்கள். உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.---------------
எனது வயது 72. சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தும், 20 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல நிலையில் வங்கி கணக்கு இருந்தும், ரூபே கடன் அட்டை வழங்க மறுப்பது எப்படி சரி?
கே.வெங்கடகிருஷ்ணன், சென்னை.
உங்கள் பார்வையில் நீங்கள் செயல்திறனோடும், ஊக்கத்தோடும் தான் இருக்கிறீர்கள். ஆனால், வங்கி அப்படி பார்ப்பதில்லை. உங்கள் வயதையும் நிலையான வருவாயையும் தான் அவை கருத்தில் கொள்கின்றன.
அவர்களைப் பொறுத்தவரை, நீங்கள் விதிவிலக்கு. உங்களுக்காக அவர்கள் தங்கள் விதிகளைத் தளர்த்திக்கொள்ள மாட்டார்கள். 'எதற்கு இந்த இம்சை, வேண்டவே வேண்டாம்' என்று நகர்ந்துபோய்க் கொண்டே இருங்கள்.
நான் ஓய்வு பெற்று ஓய்வூதியம், மற்றும் வட்டி வருமானம் பெற்று வருகிறேன். எனக்கு சொந்தமான பிளாட்டின் பேரில், ஒரு வீடு கட்டுவதற்காக கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, வேலையில் இல்லாமல் இருப்பதால், வங்கிகளில் கடன் கொடுக்க தயங்குகிறார்கள். இதற்கு மாற்றாக கடன் கொடுக்கும் நம்பிக்கையான வேறு நிறுவனங்கள் உள்ளனவா? என்னுடைய வருவாயிலிருந்து இ.எம்.ஐ., செலுத்த என்னால் முடியும்.
டி.ஆர்.ராமகிருஷ்ணன், கோவை.
பொதுத் துறை வங்கிகளான, எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, பி.என்.பி., பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்டவை மூத்த குடிமக்கள் வீடு கட்டுவதற்கு கடன் கொடுக்கின்றன. உங்கள் வயதுக்கும் ஓய்வூதியத் தொகைக்கும் ஏற்ப, வட்டி விகிதம் சற்றே உயர்வாகவும், திருப்பிச் செலுத்தும் காலம் குறைவாகவும் இருக்கக் கூடும்.
உங்கள் மகனையோ, மகளையோ இணை கடனாளியாக இணைத்துக்கொண்டால், கடன் தொகையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவும் கோர முடியும். மேலேயுள்ள கேள்விக்கு சொன்ன பதிலைப் போன்று தான், உங்கள் வயதை வங்கிகள் உங்கள் பலவீனமாகவே பார்க்கின்றன.
அதற்கு ஏற்ப அவை தம் முதலீட்டை பத்திரப்படுத்திக்கொள்ளவே முயற்சி செய்யும். அதனால், நீங்கள் சற்றே கூடுதல் செலவு செய்யவேண்டியிருக்கும்.
வயதான காலத்தில் தான் நோய்கள் வருகின்றன. அப்போது இன்ஷூரன்ஸ் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே? இது நியாயமா?
வை.கோவிந்தராஜன், ஸ்ரீரங்கம்.
இதுநாள் வரை இந்தச் சிக்கல் இருந்தது. ஆனால், சமீபத்தில் இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதுநாள்வரை தனிநபர் மருத்துவ காப்பீடு பெறுவதற்கு 65 வயது என்ற உச்சவரம்பு இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவ வசதி பெறுவதற்கு 48 மாதங்களாக இருந்த காத்திருப்பு காலம், தற்போது 36 மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளன.
இந்த தளர்வை ஒட்டி, இனிமேல், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மூத்த குடிமக்களுக்கான புதிய வகை காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்யும். உங்கள் தேவைக்கேற்ப அப்போது அவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
என்னுடைய மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி. 'ஆன் ஹோல்டு' என்று சொல்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
சி.பிரயுத்ஷா பாண்டியன், திருப்பூர்.
நீங்கள் ரீ கே.ஒய்.சி., செய்ய வேண்டியிருக்கும். அதாவது, நீங்கள் எஸ்.ஐ.பி., போட ஆரம்பித்த போது, கே.ஒய்.சி., செய்திருப்பீர்கள். இப்போது, அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆவணங்கள் விலக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வங்கி ஸ்டேட்மென்ட்கள், பல்வேறு கட்டண ரசீதுகள் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், உங்கள் இ - மெயிலோ, மொபைல் எண்ணோ சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், மீண்டும் கே.ஒய்.சி., மேற்கொள்ள வேண்டும்.
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அட்டை அல்லது மத்திய அரசு கொடுத்துள்ள வேறு ஏதேனும் சான்றளிக்கப்பட்ட ஆவணம் மட்டுமே, கே.ஒய்.சி.,யில் ஏற்றுக்கொள்ளப்படும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881

