ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டு கடன் வாரிசு பொறுப்பேற்க வேண்டுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: கிரெடிட் கார்டு கடன் வாரிசு பொறுப்பேற்க வேண்டுமா?
ADDED : ஏப் 08, 2024 01:01 AM

என் மனைவி 4 லட்சம் ரூபாயை, நீண்ட கால ஆதாயமாக பங்குகளை விற்று சம்பாதித்து உள்ளார். வேறு வருமானம் கிடையாது. இதற்கு வரி உண்டா? ரிட்டர்ன்ஸ் பைல் பண்ண வேண்டுமா?
கே.இ.ராஜசேகர், விருதுநகர்.
பங்குகளை விற்று வரக்கூடிய லாபத்தில், ஓராண்டில், 1 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டாம். மீதமுள்ள தொகைக்கு, 10 சதவீதம் நீண்டகால ஆதாய வரி கட்ட வேண்டும். அதற்கு ஐ.டி.ஆர்., 1ஐ தாக்கல் செய்தாலே போதுமா, ஐ.டி.ஆர்., 2 தாக்கல் செய்ய வேண்டுமா என்பதை ஆடிட்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
நிறுவனத்தின் ப ங்குகளை பிறருக்கு பரிசாக வழங்க முடியுமா? அதற்குரிய வழிமுறைகளைக் கூறவும்.
த.ரமேஷ், முதுகுளத்துார், ராமநாதபுரம்.
தாராளமாக வழங்கமுடியும். 'பிறருக்கு' என்று நீங்கள் குறிப்பிடுவது, உறவினர் அல்லாதவர்களுக்கு என்று நான் புரிந்துகொள்கிறேன். நெருங்கிய உறவினர்களுக்குக் கொடுக்கும்போது, அதற்கு வரி ஏதும் கிடையாது.
ஆனால், உறவினர் அல்லாதவர்களுக்கு 50,000 ரூபாய் மதிப்புக்கு மேல், பங்குகளை பரிசாக கொடுக்கும்போது, அது அவரது கணக்கில் வருவாயாக கணக்கிடப்படும்.
அதை அவர் 'இதர இனங்களில் இருந்து வருவாய்' என்று காண்பித்து, வரி கணக்கிட வேண்டும்.
நீங்கள் பரிசாக கொடுப்பவருக்கு 'டீமேட்' கணக்கு இருக்க வேண்டும். இதை உங்களது ஸ்டாக் புரோக்கிங் வலைதளம் வாயிலாகவே செய்யலாம். கூடுதலாக, தான பத்திரம் பதியச் சொல்வர்.
நகைக் கடைகளில் தங்க நகைச் சீட்டு போடுவது லாபகரமானதா?
வி.ஆனி ஜோசபைன், கடலுார்.
முதல் விஷயம், இதுபோன்ற திட்டங்களுக்கு எந்த விதமான சட்ட ரீதியான உத்தரவாதமும் கிடையாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில பெரிய நகைக் கடைகள் மூடப்பட்ட போது, நகைச் சீட்டு போட்டவர்கள், சேமிப்பை இழந்து திண்டாடியது நினைவிருக்கலாம்.
அதன் பின் மத்திய அரசு இத்தகைய திட்டங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடியவை என்று வகைப்படுத்தி, பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது.
அதனால் தான் இப்போது 11 மாதங்கள் திட்டங்களை பெரும்பாலான நகைக்கடைகள் செயல்படுத்தி வருகின்றன.
இழப்பு ஏற்பட்டால் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள், இத்தகைய திட்டங்களில் சேர்வது குறித்து யோசிக்கலாம்.இத்தகைய நகை சேமிப்புத் திட்டம் லாபகரமானது தான். மாதாந்திர தவணைகளை முறையாக செலுத்தி வந்தால், கடைசி மாதத்தில் ஒரு டிஸ்கவுன்ட் கிடைக்கலாம். செய்கூலி, சேதாரத்தில் கணிசமான கழிவு கிடைக்கலாம்.
ஒருசில நிறுவனங்கள், மாதாந்திர தவணைத் தொகைக்கு ஈடாக, அன்றைய நாளின் தங்க விலையில், கிராம்களை வரவு வைக்கும் முறையையும் பின்பற்றுகின்றன. ஆண்டு இறுதியில் பார்க்கும்போது, இது நல்ல லாபகரமாக திட்டமாக இருக்கும். ஆனால், ரிஸ்க் அதிகம், ஜாக்கிரதை.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் மறைந்துவிட்டால், அவர் செலுத்த வேண்டிய தொகையில் ஏதேனும் கழிவோ தள்ளுபடியோ உண்டா? அல்லது, அவரது வாரிசுகள் அந்த கடன் தொகையைக் கட்ட வேண்டுமா? வாரிசுகள் கடனை செலுத்த முன்வரும் பட்சத்தில், அத்தொகையின் மீது விதிக்கப்படும் வட்டியோ, அபராதமோ தள்ளுபடி செய்யப்படுமா?
எம்.நாராயணன், பெங்களூரு.
கிரெடிட் கார்டு வாங்கியவர் மரணமடைந்து விட்டால், அந்தக் கடன் அப்படியே காற்றில் கரைந்து விடுவதில்லை. கார்டு நிறுவனம் எப்படியாவது கடனை வசூலிக்க பார்க்கும். கார்டுதாரரின் வாரிசை தொடர்புகொண்டு, கடன் தொகையை கட்டச் சொல்லி கேட்கும்.
இதில் ஓர் அம்சம் கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட வாரிசு எவ்வளவு தொகையை தன் பெற்றோரிடம் இருந்து வாரிசுரிமை அடிப்படையில் பெறுகிறாரோ, அதற்கேற்பவே, அவர் கிரெடிட் கார்டு கடனை செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ஒருவர் 30,000 ரூபாயை கிரெடிட் கார்டில் கடன் வாங்கி, உரிய காலத்தில் 'டியூ' செலுத்தாமல், அது 75,000 ரூபாய் ஆகும்போதும் மறைந்துவிட்டார் என்று கருதுவோம்.
இப்போது, அவரது மகன், இந்த 75,000, அதற்கு மேலோ, வாரிசுரிமை அடிப்படையில் சொத்து பெறுகிறார் என்றால், அவர் இந்த முழுக் கடனையும் அடைக்கவேண்டும். ஒருவேளை, அவருக்கு கிடைக்கும் சொத்தின் மதிப்பு 75,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அவருக்கு எவ்வளவு தொகை வந்துள்ளதோ, அந்த அளவுக்கு அடைக்கவேண்டும்.
அப்பா எந்த சொத்தையும் விட்டுவிட்டு போகவில்லை என்றால், அவரது வாரிசு, அசல் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். அதற்கு எந்தவிதமான வட்டியையும் செலுத்த வேண்டியதில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேல் இது தனிநபர் உறவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. சில கேஸ்களில் அப்பா- வாரிசுக்கு இடையே தொடர்பே இல்லாமல் கூட இருக்கக்கூடும் என்பதால், அதற்கேற்ப ஒவ்வொரு வழக்கும் மாறுபடவும் வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக கிரெடிட் கார்டு நிறுவனம் கடன் தொகையை மீட்க அணுகும் முறை இப்படித்தான் இருக்கிறது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881

