UPDATED : ஜன 13, 2024 11:42 AM
ADDED : ஜன 09, 2024 10:27 AM
புதுடில்லி: 'ஏசியன் கான்கிரீட் மற்றும் சிமென்ட்' நிறுவனத்தின், 775 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தை முழுமை யாக கையகப்படுத்தியுள்ளதாக 'ஏ.சி.சி.,' நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்திற்கு சொந்தமான ஏ.சி.சி., நிறுவனம், ஏசியன் கான்கிரீட் மற்றும் சிமென்ட் நிறுவனத்தின் எஞ்சியுள்ள 55 சதவீத பங்குகளை, 775 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏ.சி.சி., நிறுவனம், அதானி சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான, 'அம்புஜா சிமென்ட்' நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். முன்னதாக, ஏ.சி.சி., நிறுவனம், ஏசியன் கான்கிரீட் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீதமுள்ள 55 சதவீத பங்குகளையும் வாங்கியதன் வாயிலாக, அந்நிறுவனத்தை ஏ.சி.சி., நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. வருகிற 2028ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 14 கோடி டன் சிமென்ட் தயாரிப்பு என அதானி சிமென்ட் இலக்கு வைத்திருக்கிறது. அதை எட்டுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் 5,185 கோடி ரூபாய் மதிப்பில் 'சங்கி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தியது. 'ஆதித்யா பிர்லா' குழும நிறுவனமான 'அல்ட்ரா டெக்' சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த நிலையில் அதானி சிமென்ட் இரண்டாவது முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.