UPDATED : மார் 16, 2024 10:31 AM
ADDED : மார் 15, 2024 09:55 PM

புதுடில்லி: இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளதாகவும், இருப்பினும் நாட்டின் தொழில்துறை உற்பத்தியில், அது மூன்றாவது இடம் வகிப்பதாகவும், ஏ.எஸ்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எஸ்.ஐ., எனும் தொழில்துறைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் தமிழகம், 2021-22 நிதியாண்டு நிலவரப்படி, 39,512 தொழிற்சாலைகளுடன், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக, முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டின் தொழில்துறை உற்பத்தில், தமிழகம் மூன்றாவது இடத்திலும், குஜராத் முதலிடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ள தாவது: இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில், 15.80 சதவீதம் தமிழகத்திலும், 11.90 சதவீதம் குஜராத்திலும் உள்ளது. ஆனால், நாட்டின் தொழில்துறை உற்பத்தியில், 18.01 சதவீதம் அதாவது 21.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன், குஜராத் முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா 13.97 சதவீதத்தில் இரண்டாவது இடத்திலும், தமிழகம், 9.73 சதவீதம் அதாவது 11.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொழிற்சாலைகளில் அதிக ஊழியர்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் இருந்த போதிலும், அதிகம் மூடப்பட்ட தொழிற்சாலைகள் எண்ணிக்கையில், அது முன்னணி வகிக்கிறது. மேலும், தொழிற்சாலைகளில் முதலீடு செய்த அளவும், 60,745 கோடி ரூபாயாக, மிகக் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

