ADDED : ஜன 23, 2024 10:42 PM

சென்னை: இந்தியாவில் தரமற்ற முறையில் உள்ள 78 மருந்துகளை, சந்தையில் இருந்து நீக்க, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் 1,008 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 78 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த மருந்துகளை சந்தையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விபரங்கள், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மருந்துகள், பெரும்பாலும் ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

