ADDED : மார் 17, 2024 01:42 AM

புதுடில்லி:'அதானி குழுமம்' லஞ்சம் கொடுத்ததாக  புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பான விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
எரிசக்தி தொடர்பான திட்டம் ஒன்றில் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அமெரிக்கா இதுகுறித்த விசாரணையை துவக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானி குழுமமும்,  'அசூர் பவர் குளோபல்' நிறுவனமும், பசுமை எரிசக்தி துறையில் போட்டித்தன்மையுடன் செயல்பட்டு வருகின்றன. இவை இந்திய அரசின் சோலார் திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.
இந்நிலையில், அசூர் நிறுவனம் முறைகேடாக பணம் செலுத்தியதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, நியூயார்க் பங்குச் சந்தை பட்டியலிலிருந்து கடந்தாண்டு, அந்நிறுவனம் நீக்கப்பட்டது.
அதானி குழுமத்தை பொறுத்தவரை, அமெரிக்காவைச் சேர்ந்த சில முதலீட்டாளர்கள் குழுமத்தில் முதலீடு செய்துள்ளதை அடுத்து, அங்குள்ள நீதித்துறை விசாரணையை துவக்கியுள்ளது. அதானி குழுமம், விசாரணை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளது.

