'லஞ்ச குற்றச்சாட்டில் அதானி பெயர் இல்லை' தவறான செய்தி என அதானி குழுமம் அறிக்கை
'லஞ்ச குற்றச்சாட்டில் அதானி பெயர் இல்லை' தவறான செய்தி என அதானி குழுமம் அறிக்கை
ADDED : நவ 28, 2024 02:25 AM

புதுடில்லி:அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, முதுநிலை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது, அமெரிக்க நீதித் துறை எவ்வித லஞ்ச குற்றச்சாட்டும் சுமத்தவில்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் அன்னிய ஊழல் நடவடிக்கை தடுப்பு சட்டமான எப்.சி.பி.ஏ., வின் கீழ் கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது எந்தவித விதிமீறல் குறித்தும் குற்றம்சாட்டப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட ஐந்து பிரிவு குற்றச்சாட்டு களில் ஒன்று மற்றும் ஐந்து ஆகியவற்றில் எப்.சி.பி.ஏ., மற்றும் நீதி வழங்கலை தடுப்பது போன்ற சதிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதில், மேற்கண்ட மூவரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க நீதித் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்களின் தவறான புரிதல் இது. அதானி குழும இயக்குனர்கள் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக, முற்றிலும் தவறான மற்றும் பொறுப்பற்ற செய்தியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நீதித் துறையின் குற்றச்சாட்டில், லஞ்சம் வழங்க விவாதிக்கப் பட்டது, உறுதியளிக்கப்பட்டது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, இந்திய அதிகாரிகள் அதானி குழும தரப்பிடம் இருந்து லஞ்சம் பெற்றதற்கான எந்தவித ஆதாரமும் காட்டப்படவில்லை. இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, அதானி குழுமத்தைச் சேர்ந்த, 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனமும், அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என பங்குச் சந்தைகளிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
'ஆதாரமற்ற குற்றச்சாட்டு'
அதானி குழும வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியதாவது:அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளை ஆழ்ந்து படித்தேன். பொத்தாம் பொதுவாகவே, ஒப்பந்தங்களை பெற லஞ்சம் வழங்க இந்திய அதிகாரிகளுடன் அதானி குழுமம் ஆலோசனை நடத்தியது என்று கூறப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் பெயர் உட்பட யாருடைய பெயரோ, எந்தவித ஆதாரமோ அதில் இடம்பெறவில்லை.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. எனினும், அதானி குழுமம் அமெரிக்க வழக்கறிஞர்களின் ஆலோசனையை கேட்டு நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன். ஆதாரமற்ற அமெரிக்க குற்றச்சாட்டு மற்றும் பொறுப்பற்ற, தவறான செய்தி வெளியீடுகளால், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமத்துக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் ரத்து, பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தைகளில் பாதிப்பு, நீண்டகால கூட்டாளி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பொதுமக்களால் திடீரென குழும நிறுவனங்கள் ஆய்வு என, கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.நான் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இல்லை, இவற்றை அந்தக் குழுமத்தின் வழக்கறிஞராக தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.