ADDED : மே 17, 2025 12:37 AM

மும்பை:மும்பை, ஆமதாபாத் விமான நிலையங்களில், தரை வழி கையாளுதல் நடவடிக்கைகளுக்காக துருக்கியைச் சேர்ந்த 'செலிபி' நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொள்வதாக அதானி ஏர்போர்ட் அறிவித்து உள்ளது.
பஹல்காமில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, இந்தியா ஆப்பரேஷன் சிந்துாரை நடத்தியது.
இந்த விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானுக்கு, துருக்கி வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது. இதனால், துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள் உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். துருக்கிக்கு முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணங்களையும் ஏராளமானோர் ரத்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியை சேர்ந்த செலிபி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை மத்திய அரசு திரும்ப பெற்றது.
மும்பை, ஆமதாபாத், மங்களூர், குவாஹத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம் விமான நிலையங்களை நிர்வகித்து வரும் அதானி ஏர்போர்ட், மும்பை, ஆமதாபாத்தில் செலிபி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.