ஏற்றுமதியாளரிடம் குறை கேட்கிறது ஏ.இ.பி.சி. வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் அரசு
ஏற்றுமதியாளரிடம் குறை கேட்கிறது ஏ.இ.பி.சி. வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் அரசு
ADDED : ஜன 19, 2024 09:44 PM

திருப்பூர்:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதி வர்த்தகம். ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளுடன் பொருளாதார வளர்ச்சிக்கான வர்த்தக ஒப்பந்தமும் உள்ளது. இந்நிலையில், வரியில்லா ஒப்பந்தம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உள்ள நாடுகளுடன், ஏற்றுமதி வர்த்தக மதிப்பை, ஆண்டுக்கு ஆண்டு உயர்த்த, மத்திய வர்த்தகத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., வாயிலாக, நாடு முழுதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களிடம், கருத்து கேட்கும் பணி துவங்கி உள்ளது.
இது குறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்புடைய நாடுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து, மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில், வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், ஒப்பந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள் குறித்த கருத்து கேட்டு வருகிறது.
இறக்குமதி நாடுகள், சுங்கவரி, பருத்தி, ஆடை உற்பத்தியில் பயன்படுத்தும் ரசாயனம், மின்சார பயன்பாடு மற்றும் தண்ணீர் பயன்பாடு, தரச்சான்று என, பல்வேறு தர நிர்ணயத்தை எதிர்பார்க்கின்றன.
நேரடி வர்த்தகம் செய்யும் ஏற்றுமதியாளருக்கு மட்டுமே, உண்மையான பிரச்னைகள் தெரியும். ஏற்றுமதியாளர்கள், சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து தெரிவித்தால், மத்திய அரசு, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசி, வர்த்தக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
நாடு முழுதும் உள்ள, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், https://forms.gle/uME1AU1f9wNPNVCA6 என்ற 'லிங்க்'கில், தங்களது கருத்துக்களையும், குறைகளையும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்றுமதியில் தொடர்புடைய நாடுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி.,கருத்து கேட்கிறது