சென்னையில் 'இந்தோ - தைவான்' தொழில் பூங்காவுக்கு ஒப்பந்தம்
சென்னையில் 'இந்தோ - தைவான்' தொழில் பூங்காவுக்கு ஒப்பந்தம்
ADDED : ஏப் 27, 2025 01:14 AM

சென்னை:சென்னைக்கு அருகில், 'இந்தோ - தைவான்' தொழில் பூங்கா அமைப்பதற்காக, தமிழக அரசின், 'கெய்டன்ஸ்' நிறுவனம் மற்றும் தைவான் வர்த்தக கூட்டமைப்பு இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ், காலணி போன்ற துறைகளில் தொழில் துவங்குவதில், தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்களின் பங்கு அதிகம்.
எனவே, தைவான் நாட்டு நிறுவனங்களுக்காக உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆலை அமைப்பதற்காக சர்வதேச தரத்தில், தைவானிய தொழில் பூங்காவை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது.
இதற்கான அறிவிப்பை சட்டசபையில், தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்த பூங்கா, தைவான் நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து, சென்னைக்கு அருகில், 'இந்தோ - தைவான்' தொழில் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசின், 'கெய்டன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம், தைவான் வர்த்தக கூட்டமைப்பு இடையில், சென்னையில் அமைச்சர் ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
முதல் கட்டமாக இந்த பூங்கா, 1,800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.