UPDATED : டிச 12, 2025 01:41 AM
ADDED : டிச 12, 2025 01:10 AM

புதுடில்லி: நீண்டகாலமாக இருந்து வரும் பெரும்பாலான வர்த்தக ரீதியான சவால்களை, இந்தியாவும் அமெரிக்காவும் நிவர்த்தி செய்துள்ளதாகவும், எனவே, வரும் மார்ச் மாதத்துக்கு முன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால் மிகுந்த ஆச்சரியப்படுவேன். கடந்த நவம்பர் மாதமே இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறவில்லை. இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் சம்பந்தமான விஷயமோ, அதே அளவுக்கு புவிசார் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் நினைக்கிறேன்.
ஆகவே, இதற்கு காலக்கெடு நிர்ணயிப்பது மிக கடினமானது. சர்வதேச வர்த்தக சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் அனைத்தும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன.
உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது. அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, பிற சந்தைகளின் வாயிலாக ஏற்றுமதியாளர்கள் ஈடுசெய்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மோடி - டிரம்ப் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு தரப்பு உறவு
சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி
தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேலும்
அதிகரிக்க சம்மதம் தெரிவித்தனர். பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும்
எரிசக்தி துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது,” என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு
நடத்த அமெரிக்க குழு இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த நிலையில், இந்த
உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

