சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்புக்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு
சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்புக்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 02, 2025 12:53 AM

திருப்பூர்:சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் முயற்சியாக, கச்சா பாமாயில், சோயாபீன்ஸ், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை, 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு, விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து, தமிழக விவசாய சங்கங்கள் தெரிவித்திருப்பதாவது:
உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு வரிக்குறைப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்ததால் இறக்குமதி வரியை குறைத்துள்ளனர்.
உரிய விலை கிடைக்காவிட்டால், விவசாயிகள் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியேறி விடுவர்.
இறக்குமதி வரியை குறைத்திருப்பதன் வாயிலாக, நாடு முழுதும் கோடிக்கணக்கான எண்ணெய் வித்து உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
சமையல் எண்ணெய் 70 சதவீதம், பருப்பு 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் குறைந்துவிட்டது. இதன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும். அன்னிய நாடுகளிடம் சமையல் எண்ணெய்க்காக கையேந்தக்கூடாது.
கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு கண்டனத்திற்குரியது. அதை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளன.