வேளாண் பொருள் மதிப்பு। கூட்டலுக்கு ஈரோட்டில் 20 ஏக்கரில் தொழிற்பேட்டை
வேளாண் பொருள் மதிப்பு। கூட்டலுக்கு ஈரோட்டில் 20 ஏக்கரில் தொழிற்பேட்டை
ADDED : ஜூலை 24, 2025 11:29 PM

சென்னை:வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன் பெற, ஈரோடு மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை, 'சிட்கோ' நிறுவனம், அடுத்த மாதம் துவங்குகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 49.47 ஏக்கரில், 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு தொழிற்பேட்டை உள்ளது.
அங்குள்ள மனைகள், பொது பிரிவு தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன் பெற, ஈரோடு சிட்கோ விரிவாக்க தொழிற்பேட்டை, 20 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
திட்டச் செலவு, 15 கோடி ரூபாய். இதில் நிலத்தின் மதிப்பு, 12 கோடி ரூபாய். இங்கு, 3 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணி, அடுத்த மாதம் துவங்குகிறது. 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் தொழில் மனைகள், வேளாண் சார்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.