ஏ.ஐ., மாநாடு இந்தியாவை அறிவுத்திறன் மையமாக மாற்றும்
ஏ.ஐ., மாநாடு இந்தியாவை அறிவுத்திறன் மையமாக மாற்றும்
UPDATED : பிப் 18, 2026 05:09 AM
ADDED : பிப் 18, 2026 01:11 AM

இந்திய ஏ.ஐ., இம்பாக்ட் சம்மிட் 2026ல் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியில் செயற்கை நுண்ணறிவு புதிய பரிமாணம் பெற்று வருவதாக தெரிவித்தார்.
உலகம் வேகமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில், இந்தியா அதனை மிகுந்த வேகமாக பயன்படுத்தி வருவதால் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குவதாக பிரதான் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பம் இந்தியாவை உலகளாவிய அறிவுத்திறன் மையமாக மாற்ற உதவும் என்றும், 'வளர்ந்த பாரதம் 2047' நோக்கத்தை நிறைவேற்ற முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், மாநாட்டின் ஒரு பகுதியாக, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ஏ.ஐ., கல்வியை கற்பிக்க முன்னுரிமை என்ற சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பிரதான் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த அமர்வில் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு செயலர் சஞ்சய் குமார், உயர் கல்வி செயலர் வினீத் ஜோஷி மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கிராமப்புற கல்வியில் ஏ.ஐ.,
கல்வியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து பேசிய ஜோஹோ நிறுவன இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற மாணவர்களுக்கு ஏ.ஐ., மிகப்பெரிய கற்றல் ஊக்கியாக இருக்கும் என்று கூறினார்.
ஆசிரியர்களுக்கு உதவுவதற்காகவும், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், சிறிய அளவிலான புதுமைகள், குறிப்பாக, தனிப்பட்ட பயனுக்கான மின்சார வாகனங்கள் தயாரிப்பு போன்ற திட்டங்களை உருவாக்கும் திறனை வளர்க்கவும் ஏ.ஐ., மாதிரிகளை பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உலகுக்கு கல்வி மாதிரி
யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் பொது பரிவர்த்தனை அமைப்பில் இந்தியா உலகுக்கே முன்னுதாரணமாக விளங்கியதை சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடி சுட்டிக்காட்டினார். அதேபோல், கல்வியில் செயற்கை நுண்ண றிவை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான முழுமையான மாதிரியை உலகிற்கு வழங்க இந்தியா தயாராகி வருவதாக அவர் கூறினார்.
“நிதித்துறையில் நாம் செய்ததுபோல், கல்வித்துறையிலும் முழுமையான வரைமுறையை உருவாக்க விரும்புகிறோம். நாம் உருவாக்கியுள்ள மாதிரி உலகளாவிய அளவில் விரிவாக்கக்கூடியது,” என்றார்.
மேலும், 22 மொழிகளில் தகவல் வழங்கும் திறன் இந்தியாவின் பலமாகும் என்றும், தாய்மொழியில் கற்றல், முழு கற்றல் அனுபவத்தையே மாற்றும் சக்தி உடையது என்றும், அவர் 2035க்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமா க உயர்த்த ஏ.ஐ., முழுமையாக பயன்படுத்தப்படலாம் என்றார்.
காஞ்சி சேலைக்கும் ஏ.ஐ.,
கணினி உலகில் மட்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அல்ல, ஏ.ஐ., பாரம்பரிய சேலை வடிவமைப்பிலும் அது புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
டாடா குழும நிறுவனங்களின் 'டாடா ஏ.ஐ., சகி' திட்டத்தின் வழிகாட்டி முத்துலட்சுமி, நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கைவினை கலைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் யோசனைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
'காஞ்சிபுரம் சில்க் பார்க்' என்ற தனிப்பட்ட மென்பொருள் தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 முதல் 3 மாதங்கள் வரை எடுக்கும் தன் விருப்ப வடிவிலான சேலை தயாரிப்பின் காலத்தை குறைப்பதே இதன் நோக்கம். இந்த மென்பொருள் வடிவமைப்பு, வடிவம், நிறங்கள் போன்ற தகவல்களை உள்ளீடாக பெற்று, தறி நெசவாளர்களுக்கு எல்.இ.டி., விளக்குகள் வாயிலாக வழிகாட்டுகிறது.
பழமையான முறையில், வடிவமைப்பை நெசவாளர்கள் உருவாக்கும் போது ஏற்படும் பிழைகள், நேரம், மூலப்பொருட்கள் வீணாகும் சூழலை உருவாக்கும். புதிய ஏ.ஐ., தீர்வு காரணமாக, பிழைகள் கணிசமாக குறைகின்றன. இதன் வாயிலாக நேரமும், மூலப்பொருள் இழப்பும் தவிர்க்கப்படுகின்றன.
தற்போது 'காஞ்சிபுரம் சில்க் பார்க்' வளாகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தீர்வை, மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ.ஐ., உதவியுடன் உருவாக்கப்படும் நுணுக்கமான, சிக்கலான வடிவமைப்புகளை கொண்ட சேலைகள், சாதாரண சேலைகளை விட அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இது கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏ.ஐ., இம்பாக்ட் மாநாட்டில், இம்மர்சன் திட்டம் வாயிலாக 2,000 கிராமப்புற கைவினை மகளிருக்கு வெற்றிகரமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பலர் கைபேசி வழிக் கற்றலில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது அடித்தட்டு நிலை டிஜிட்டல் தயார்நிலையை உறுதிப்படுத்துவதோடு, ஏ.ஐ., சார்ந்த கிராமப்புற தொழில் முனைவு திறனுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும்.
-நமது சிறப்பு நிருபர்-

