தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏ.ஐ., வழிகாட்டுதலுடன் பயிற்சி
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏ.ஐ., வழிகாட்டுதலுடன் பயிற்சி
ADDED : பிப் 07, 2025 12:22 AM

சென்னை:தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி வழங்க, மாநில தகவல் தொழில்நுட்பவியல் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு பயிற்சியை வழங்க, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழக ஏ.ஐ., மிஷன் வாயிலாக, தொழில் இணைப்புக்கு தேவையான 'மென்டோர்ஷிப்', அரசு கொள்கைகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கும், உதவி தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பத் துறை வாயிலாக வழங்கப்படும்.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தகுதி பெறும் நிறுவனங்களை அரசு தேர்வு செய்து, அவர்களுக்கு படிப்படியான பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சி நான்கு வாரம் துவங்கி, 18 மாதங்கள் வரை வழங்கப்படும். பயிற்சியில் கொள்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள், தொழிலை வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம்பெறும்.
இதற்காக 'சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்' வாயிலாக 'கம்ப்யூட்டிங் ஆப்ரேட்டங்'முறையில் ஹார்டுவேர், சாப்ட்வேர், நெட்வொர்க்கிங் தொடர்பு உள்ளிட்ட பல வகைகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.