ADDED : நவ 21, 2024 10:13 PM

சென்னை:தமிழகத்தில், விரைவில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக, மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆங்கில நாளேடு சார்பில் நடைபெற்ற ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்ற அவர், தெரிவித்ததாவது:
தமிழக அரசு, செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையத்தை விரைவில் அமைக்க இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆய்வகங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வியாளர்கள், தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தேவைகளுக்காக, குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த ஏ.ஐ., ஆய்வகங்கள் அமைகின்றன.
தமிழக அரசு தன் நிர்வாக ரீதியான செயல்பாடுகளில், ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் விவசாயம் தொடர்பான சேவைகளை வழங்குவதிலும்; அரசு ஊழியர்களுக்கு முக அடையாளம் பொருந்திய வருகை பதிவேடு முறையிலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவில் சாதகமான அம்சங்கள் உள்ள போதிலும், அதற்கு ஆதாரமாக வழங்கப்படும் தரவுகளிலும், இதனை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நபர்களிடமும், ஒருதலைபட்ச சார்பு இருப்பதாக எழுப்பப்படும் சந்தேகங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு தெரிவித்தார்.