விமானப்படை விமான கொள்முதல் பிரேசில் நிறுவனம் - மஹிந்திரா ஒப்பந்தம்
விமானப்படை விமான கொள்முதல் பிரேசில் நிறுவனம் - மஹிந்திரா ஒப்பந்தம்
ADDED : பிப் 10, 2024 12:54 AM

மும்பை:பிரேசிலை சேர்ந்த 'எம்ப்ரேயர் டிபென்ஸ் அண்டு செக்யூரிட்டி' நிறுவனம், இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் திட்டத்திற்காக மஹிந்திராவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தானது.
இந்திய விமானப்படையின் நடுத்தர போக்குவரத்து விமான கொள்முதல் திட்டத்தின் கீழ், சி390 மில்லினியம் மல்டிமிஷன் விமானங்களையும் கூட்டாக கையகப்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுஉள்ளது.
மேலும், இதற்கான தொழில் மயமாக்கல் திட்டத்தை உருவாக்குவதற்கு உள்நாட்டு விண்வெளித் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளன.
சி-390 மில்லினியம் விமானங்கள் குறைந்த இயக்கச் செலவுகளுடன் அதிக உற்பத்தித்திறன் மற்றும் இயக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இந்த விமானம் 26 டன் எடையை சுமந்து கொண்டு, மணிக்கு 870 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த எம்ப்ரேயர் நிறுவனத்தின் தலைவர் போஸ்கோ டா கோஸ்டா ஜூனியர், “இது, பிரேசிலுக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்று.
“மேலும், எம்ப்ரேயரின் முக்கிய சந்தையாக விளங்கி வரும் இந்தியா, பலதரப்பட்ட வலுவான பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளை கொண்டுள்ளது,” என்று கூறினார்.