ADDED : ஜன 04, 2025 12:18 AM

சென்னை:நம் நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே வான்வழி போக்குரவத்து உள்ளது. ஆனால், ஒரு நகரத்திற்குள் வான்வழி போக்குவரத்து கிடையாது. சில வெளிநாடுகளில் நகரத்துக்குள்ளேயே ஒருவர் அல்லது இருவர் பயணிக்கும் வகையிலான சிறிய ரக விமானத்தில் செல்லும் வான்வழி போக்குவரத்து வசதிகள் உள்ளன.
டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அண்மைக் காலமாக சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசு சென்னையில், 'ஏர் டாக்சி' எனப்படும் இருவர் பயணிக்கும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஒரு நகரத்திற்குள் வான்வழியாக மனிதர்கள் விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பான அம்சங்கள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்து, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

