ஜி.டி.பி.,யை மிகைப்படுத்தவில்லை அனந்த நாகேஸ்வரன் விளக்கம்
ஜி.டி.பி.,யை மிகைப்படுத்தவில்லை அனந்த நாகேஸ்வரன் விளக்கம்
ADDED : டிச 25, 2025 01:07 AM

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்படவில்லை என்றும், நம் கணக்கீட்டு முறையை தாழ்வு மனப்பான்மையோடு பார்ப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தெரிவித்ததாவது:
கடந்த செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.20 சதவீதமாக பதிவானது. இது அனைவரது எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக அமைந்தது.
இதையடுத்து சில ஊடகங்கள் நமது ஜி.டி.பி., கணக்கீட்டு முறையின் துல்லியம் குறித்தும் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பின. போதிய புரிதல் இல்லாத, அரைகுறையான இந்த கேள்விகள் அனைத்தும், மக்கள் மத்தியில் சந்தேகத்தை விதைப்பதற்காக, வேண்டுமென்றே பரப்பப்படுகின்றன.
எப்போதும், இதுபோன்ற சந்தேகங்கள் எதிர்ப்பார்ப்புகளை கடந்த வளர்ச்சி பதிவாகும்போது மட்டுமே எழுப்பப்படுகின்றன. மாறாக எதிர்பார்ப்பை விட வளர்ச்சி சரிவு காணும்போது யாரும் எதுவும் சொல்வதில்லை.
கொரோனா காரணமாக கடந்த 2020 - 21ம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 25 சதவீதம் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கணக்கீட்டு முறை குறித்தோ, நம்பகத்தன்மை குறித்தோ யாரும் கவலை தெரிவிக்கவில்லை.
ஏனென்றால், வளர்ச்சி கண்டிப்பாக சரிவு கண்டிருக்கும் என்ற அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகியிருக்கும் அல்லது அதையும் தாண்டி மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கும்.
அனைத்து நாடுகளின் கணக்கீட்டு முறையிலும் நிச்சயமாக ஒரு சில குறைபாடுகள் இருக்கும். ஆனால் இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது முறைகள் குறித்து மட்டுமே எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

