ஆந்திரா எரிபொருள் கொள்கை; ரூ.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு
ஆந்திரா எரிபொருள் கொள்கை; ரூ.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு
ADDED : அக் 22, 2024 10:16 AM

விஜயவாடா: ஆந்திராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், பசுமை எரிசக்தி உற்பத்திக்கான ஒருங்கிணைந்த துாய எரிபொருள் கொள்கையை, முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.
கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:
துாய எரிபொருள் உற்பத்தித் துறையில், ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி, காற்றாலை மற்றும் 24 மணி நேர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதன் வாயிலாக, 2047ம் ஆண்டுக்குள், பூஜ்ஜியம் அளவு காற்று மாசு என்ற நிலையை எட்டுவதற்கு இலக்கு உள்ளது.
துாய எரிசக்தி கொள்கை வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் ஏழரை லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 78.50 ஜிகாவாட் சூரிய மின்உற்பத்தி, 35 ஜிகாவாட் காற்றாலை மின்உற்பத்தி, 22 ஜிகாவாட் பயோ காஸ், எத்தனால் உள்ளிட்டவற்றின் வாயிலாக மின்உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 15 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் ஏற்படுத்தவும்; பேட்டரி சக்தி சேமிப்பகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனால், பயோ காஸ் உற்பத்தி, 5,000 பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றும், 10 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், புதிய கொள்கையில் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.