21 ஏக்கர் நிலம் 99 பைசா டி.சி.எஸ்.,சுக்கு ஆந்திரா ஒதுக்கீடு
21 ஏக்கர் நிலம் 99 பைசா டி.சி.எஸ்.,சுக்கு ஆந்திரா ஒதுக்கீடு
ADDED : ஏப் 15, 2025 11:07 PM

அமராவதி:தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, டி.சி.எஸ்.,நிறுவனத்துக்கு, விசாகப்பட்டினத்தில் 21 ஏக்கர் நிலத்தை, அடையாளத் தொகையாக 99 பைசாவுக்கு ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2024 அக்டோபரில், மும்பையில் உள்ள டி.சி.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐ.டி., அமைச்சரான நர லோகேஷ் , முதன்முதலில் இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, டி.சி.எஸ்.,நிறுவனத்துடன் ஆந்திர அரசு தொடர்ச்சியாக பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு இது சென்றுள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும், ஆந்திரா முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, போட்டித்தன்மையுடன் தயாராக இருப்பதை இது வெளிப்படுத்தி உள்ளது.
ஆந்திர அரசின் முடிவு, பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சனந்த் என்னுமிடத்தில் ஆலை அமைப்பதற்கான இடத்தை 99 பைசாவுக்கு அளித்ததுடன் ஒப்பிடப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது எங்களின் ஐ.டி., நிறுவனங்களுக்கான சனந்த் தருணம். விசாகப்பட்டின வரைபடத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனமும் இடம்பெற செய்ய வேண்டும் என விரும்புகிறோம்,” எனக் கூறினார்.
விசாகப்பட்டினம் நிலம் தொடர்பாக டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.