இந்தோனேஷிய மருத்துவ குழுமத்துடன் அப்பல்லோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தோனேஷிய மருத்துவ குழுமத்துடன் அப்பல்லோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜன 27, 2025 12:53 AM

சென்னை:இந்தோனேஷியாவின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில், அந்நாட்டின் மாயபதா ஹெல்த்கேர் குழுமத்துடன் அப்பல்லோ மருத்துவமனைகள் என்டர்பிரைசஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுஉள்ளன.
இதுகுறித்து அப்பல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தோனேஷியாவின் படாமில் வரவுள்ள மாயபதா ஹெல்த்கேர் மருத்துவமனைக்கான செயல்பாட்டு சேவைகளை, அப்பல்லோ வழங்க உள்ளது.
மேலும், இரு நிறுவனங்களும் டெலி ரேடியாலஜி, இ - ஐ.சி.யு., மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நோயாளிகள் பராமரிப்பு மற்றும் அணுகலை மேம்படுத்தும்.
புற்றுநோயியல், இதயவியல், நரம்பியல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தோனேசிய சுகாதாரத்துறை அமைச்சர் புடி குணாடி சாதிகின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதனடிப்படையில், மாயபதா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட 1,000 நிபுணர்களை நியமிக்க அப்பல்லோ திட்டமிட்டு உள்ளது.