ADDED : ஜூலை 30, 2025 05:50 AM
புதுடில்லி:
ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக, சீனாவில் உள்ள தன் சில்லரை விற்பனை கடை ஒன்றை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் டாலியன் நகரில் உள்ள பார்க்லேண்ட் மால் ஆப்பிள் ஸ்டோர், ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. பார்க்லேண்ட் மாலில் இருந்து பல சில்லரை விற்பனையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து, அங்குள்ள கடையை மூட முடிவு செய்துள்ளதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகளவில் 530க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், சீனா மற்றும் சீனாவால் நிர்வகிக்கப்படும் ஹாங்காங், மகாவ் பகுதிகளில் மட்டும் 56 கடைகள் உள்ளன.
சீனாவில் பணவாட்டம் நிலவி வருகிறது. உள்நாட்டு நுகர்வு குறைவு மற்றும் சர்வதேச வரி விதிப்புகளால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணங்கள். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 2.30 சதவீதம் சரிந்தது.