'இன்டெல்' நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் போட்டி
'இன்டெல்' நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் போட்டி
ADDED : நவ 04, 2024 01:26 AM

நியூயார்க்:'இன்டெல்' நிறுவனத்தை கைப்பற்றும் முனைப்பில், சில நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி 'சிப்' தயாரிப்பு நிறுவனமான இன்டெல், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், கிட்டத்தட்ட 1.39 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது.இது இந்நிறுவனம் கடந்த 56 ஆண்டுகளில் காணாத நஷ்டமாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, அண்மைக் காலத்தில், 'என்விடியா' நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் இன்டெல் திணறி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2019ல் இன்டெல் நிறுவனத்தின் 'மோடம்' தயாரிப்பு பிரிவை, ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியதை அடுத்து, தற்போது இன்டெல் நிறுவனத்தை முழுதுமாக கையகப்படுத்த பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தை தவிர, தென்கொரியாவைச் சேர்ந்த 'சாம்சங்' நிறுவனமும், இன்டெல் நிறுவனத்தை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு, சொந்தமாக சிப் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் இறங்கும் வரை, அதன் 'மேக் லேப்டாப்' தயாரிப்புகளில் இன்டெல் சிப்பை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.