இந்தியாவில் ஆராய்ச்சி மையம் அமைக்கிறது 'ஆப்பிள்' நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆழமாக காலூன்ற திட்டம்
இந்தியாவில் ஆராய்ச்சி மையம் அமைக்கிறது 'ஆப்பிள்' நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆழமாக காலூன்ற திட்டம்
ADDED : நவ 09, 2024 10:39 PM

புதுடில்லி:இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு, விற்பனை மட்டுமின்றி, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் புதிய தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு தளத்தை ஆப்பிள் நிறுவனம் துவங்கி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பதிப்பான 'ஆப்பிள் ஆபரேஷன்ஸ் இந்தியா', கடந்த வாரம், நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கையில், வன்பொருள் உருவாக்கம், தோல்வி பகுப்பாய்வு மற்றும் பொறியியல் சாதனங்கள் கொள்முதல் ஆகியவற்றில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்து உள்ளது.
மேலும், எதிர்கால அடிப்படையில், இந்திய துணை நிறுவனத்திற்கு, செயல்பாட்டு மற்றும் நிதி உதவியை உறுதி செய்யும் கடிதத்தையும் சமர்ப்பித்து உள்ளது. இது ஏற்கப்படும் சூழலில், முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் நேரடியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை கையில் எடுக்கும்.
தற்போது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தளமானது, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மட்டுமே உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு ஒட்டு மொத்த வருவாய், 7.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
இந்தியாவில் ஐபோன், ஐபாட் தயாரிப்புகளுக்கான தேவை, அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புனே, பெங்களூரு, டில்லி என்.சி.ஆர்., மும்பை நகரங்களில், நான்கு புதிய ஸ்டோர் களை திறக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.