மின்னணு உதிரிபாக உற்பத்தி மேலும் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் ரூ.7.172 கோடி முதலீடு
மின்னணு உதிரிபாக உற்பத்தி மேலும் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் ரூ.7.172 கோடி முதலீடு
ADDED : நவ 17, 2025 11:41 PM

புதுடில்லி: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் மத்திய அரசு மேலும் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, 14 நிறுவனங்கள் மொத்தம் 7,172 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், 65,111 கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதோடு சேர்த்து மொத்தம் 24 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டில் மின்னணு உதிரிபாக உற்பத்தி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு, அவற்றின் விற்பனை, மூலதன செலவினம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காக 22,919 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ள நிறுவனங்கள், கேமரா மாட்யூல், கனெக்டர்கள், பிரின்டட் சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய உள்ளன.
இதன் வாயிலாக 11,800 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களுக்குள் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், அவ்வாறு துவங்கும்பட்சத்தில், நாட்டின் மின்னணு உதிரிபாக தேவையில் பெருமளவு உள்நாட்டு உற்பத்தி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்

