ஸ்டீல் உற்பத்தியில் ஹைட்ரஜன் முன்னோடி திட்டத்துக்கு ஒப்புதல்
ஸ்டீல் உற்பத்தியில் ஹைட்ரஜன் முன்னோடி திட்டத்துக்கு ஒப்புதல்
ADDED : அக் 21, 2024 12:51 AM

புதுடில்லி:ஸ்டீல் உற்பத்தியில் ஹைட்ரஜனை பயன்படுத்தும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த, 'செயில்' உட்பட மூன்று நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துஉள்ளது.
அடுத்த மூன்று ஆண்டு கள் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்கு, அரசு 347 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்க உள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்டீல் உற்பத்தியில் ஹைட்ரஜனை பயன்படுத்தும் முன்னோடி திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, சமீபத்தில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பித்த நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனமான செயில் (3,200 டன்), மேட்ரிக் கேஸ் அண்டு ரீனியபுள்ஸ் (50 டன்), சிம்பிளக்ஸ் கேஸ்டிங்ஸ் (40 டன்) ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இத்திட்டத்தில், இரும்பில் இருந்து நேரடியாக ஸ்டீலை பிரித்தெடுக்க 100 சதவீதம் ஹைட்ரஜனை பயன்படுத்துதல், இரும்பு துண்டுகளை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் எரிகலனில் நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இந்த முன்னோடி திட்டங்கள், ஸ்டீல் உற்பத்தியில் பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை வெளிப்படுத்தும்.
மேலும், தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை சரிபார்த்து, பொருளாதார நம்பகத்தன்மையை மதிப்பிடுவதன் வாயிலாக, ஸ்டீல் உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை குறைக்க வழி வகுக்கும் என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.