சாலையோர வியாபாரிகளுக்கு கடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல்
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல்
ADDED : ஆக 28, 2025 01:21 AM

புதுடில்லி:பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி திட்டத்தை, வரும் 2030ம் ஆண்டு வரை நீட்டிக்கவும்; மாற்றியமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2020ல், கொரோனா காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டத்தை, வரும் 2030ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், திட்டத்தை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடன் வரம்பு உயர்த்தப்படுவதோடு; யு.பி.ஐ., இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு, டிஜிட்டல் கேஷ்பேக் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும். இதுவரை சென்றடையாத பகுதிகளிலும் இத்திட்டத்தின் பலன்களை பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
இதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.15 கோடி சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவர். இதில் 50 லட்சம் பேர் புதிய பயனாளர்களாக இருப்பர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்புடன் இணைந்து, சாலையோர உணவு வியாபாரிகளுக்கு நிலையான சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படும்.
கடந்த ஜூலை 30ம் தேதி வரை, இத்திட்டத்தின் கீழ், 68 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு, மொத்தம் 13,797 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணை கடன் பெறுபவர்கள் அதை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அடுத்தடுத்து கடன் பெற முடியும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.