சிறு தொழில் தயாரிப்புகளை அரசு துறைகளிடம் விற்க ஏற்பாடு
சிறு தொழில் தயாரிப்புகளை அரசு துறைகளிடம் விற்க ஏற்பாடு
ADDED : அக் 13, 2024 03:00 AM

சென்னை,:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள் வாங்குவதற்காக, தமிழக அரசு, சென்னை கிண்டியில் வாங்குவோர், விற்போர் சந்திப்பை வரும் 21ம் தேதி நடத்துகிறது.
மத்திய அரசு உத்தரவுப்படி, அனைத்து மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கும் போது, ஓராண்டின் மொத்த கொள்முதலில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து 25 சதவீதம் வாங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களின் தயாரிப்பை நேரடியாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு எப்படி விற்பது என்ற விபரம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு தெரிவதில்லை.
எனவே, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், 'பேம் டி.என்' நிறுவனம், சென்னை கிண்டியில், வாங்குவோர், விற்போர் சந்திப்பை வரும் 21ம் தேதி நடத்துகிறது.
அதில், மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் தொழிற்சாலைகள், தமிழக அரசின் போக்குவரத்து துறை, மின் வாரியம் உள்ளிட்டவை பங்கேற்க உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏற்ப, சிறு நிறுவனங்கள், 'ஆர்டர்' பெறலாம்.
இதில் பங்கேற்க பதிவு செய்யுமாறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 'பேம் டி.என்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், 62 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன
வாகன, தளவாட உதிரிபாகங்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், கண்ணாடி உட்பட பல பொருட்களை தயாரிக்கின்றன.