ADDED : ஜூலை 09, 2025 11:03 PM

புதுடில்லி:இந்தியாவின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, கடந்த நிதியாண்டில், 6.73 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, இந்திய வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், உதிரிபாகத் துறையின் வருவாய் 9.60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டு வருவாய் சராசரியாக 14 சதவீதம் உயர்ந்து, இரட்டிப்பாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், வாகன அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், உதிரி பாகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 10 சதவீதம் அதிகம்.
இதனால், வாகன உற்பத்தி 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மொத்த வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், மின்சார வாகன உதிரி பாகங்களின் பங்கு, 6.70 சதவீதமாக உள்ளது.
சந்தைக்குப்பின் விற்பனை, 6 சதவீதம் உயர்ந்து, 99,948 கோடி ரூபாயாகவும், ஏற்றுமதி, 8 சதவீதம் உயர்ந்து, 1.92 லட்சம் கோடி ரூபாயாகவும், இறக்குமதி, 7.3 சதவீதம் அதிகரித்து, 1.91 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.
வாகன டிரான்ஸ்மிஷன், ஸ்டீயரிங், இன்ஜின், சஸ்பென்ஷன்கள், பிரேக்குகள், செசிஸ் உள்ளிட்டவை அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட உபகரணங்கள்.

