சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் வழங்குவதில் வங்கிகள் மந்தம்
சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் வழங்குவதில் வங்கிகள் மந்தம்
ADDED : செப் 22, 2025 11:17 PM

சென்னை : பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம், கலைஞர் கைவினை திட்டத்தில், கடந்த ஆறு மாதங்களாக கடனுதவி வழங்குவதில், அரசு, தனியார் வங்கிகளில் மந்த நிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் துவங்கிய நான்கு ஆண்டுகளில், 15,023 தொழில்முனைவோருக்கு, 326 கோடி ரூபாய் மானியத்துடன், 854 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
இரண்டு திட்டங்கள் கலைஞர் கைவினை திட்டத்தில் இதுவரை, 4,950 நபர்களுக்கு, 17.71 கோடி ரூபாய் மானியத்துடன், 83.66 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இரு திட்டங்களும் கிராமப்பற பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடனுதவி வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விரைந்து ஒப்புதல் இந்த திட்டங்களில், அரசின் மானியங்கள் முறையாக வழங்கப்படும் போது, அதற்கு இணையாக வங்கிகளும் உடனுக்குடன் கடன் வழங்க வேண்டும்.
அரசு துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல் பட்டால் தான் ஒரு திட்டம் வெற்றியடையும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு வங்கிகள் விரைந்து ஒப்புதல் வழங்கி கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சிபில் ஸ்கோரில்
கருணை தேவை'
'சிபில் ஸ்கோர்' இல்லை என்று, பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. முதல் முறை கடன் பெறுவோருக்கு, சிபில் ஸ்கோர் பார்க்க தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை வங்கிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சிபில் ஸ்கோர் சிறிது குறைவாக இருந்தாலும், எதற்காக அது குறைந்துள்ளது என்பதை பார்த்து, கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்க வேண்டும்.