அமெரிக்க வரி உயர்வை சமாளிக்க ஏற்றுமதியாளருக்கு உதவி தேவை பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
அமெரிக்க வரி உயர்வை சமாளிக்க ஏற்றுமதியாளருக்கு உதவி தேவை பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 01:00 AM

திருப்பூர்:''அமெரிக்க வரி உயர்வை சமாளிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி பாதுகாக்க வேண்டும்,'' என திருப்பூர் பனியன் தொழிற்சங்க கூட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இது குறித்து ஆலோசிக்க, திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் அவசர கூட்டம், எல்.பி.எப்., அலுவலகத்தில்நடந்தது. பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
அதன் தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் அடுத்தடுத்த வரி விதிப்பு காரணமாக, பனியன் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
பனியன் தொழில் உட்பட ஜவுளி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வரிச்சுமைக்கு ஏற்ப ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அமெரிக்க வரி உயர்வை சமாளித்து, சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க, கடன் உத்தரவாத திட்டம், வட்டி மானியம், காப்பீடு திட்டம் வாயிலாக, ஏற்றுமதியாளருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்.
புதிய நாடுகளுடன் வர்த்தக வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும். வங்கதேச ஆடை இறக்குமதிக்கு வரி விதித்து, உள்நாட்டு ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும். வேலையிழக்கும் தொழிலாளருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
திருப்பூர் பனியன் தொழில் மற்றும் தொழிலாளரை பாதுகாக்கும் வகையில், கலெக்டர் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் உதவிகள்
ஊக்கத்தொகை
கடன் உத்தரவாத திட்டம்
வட்டி மானியம்
காப்பீடு திட்டம்
புதிய சந்தை வாய்ப்புகள்
வங்கதேச ஆடை இறக்குமதிக்கு வரி
தொழிலாளருக்கு நிவாரண உதவி