ADDED : செப் 04, 2025 10:43 PM

புதுடில்லி:மத்திய அரசு, நாட்டில் உள்ள சில அனல் மின் நிலையங்களில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளை நிறுவி சோதனை மேற்கொள்ள உள்ளதாக, மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் கன்ஷியாம் பிரசாத் கூறியதாவது:
சூரிய மின்சார உற்பத்தி உச்சத்தில் இருக்கும்போது, அனல் மின் நிலையங்கள் மின் உற்பத்தியைக் குறைக்க வேண்டியுள்ளது. ஆனால், மாலை நேரத்தில் தேவை அதிகரிக்கும்போது சூரிய மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. எனவே, தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மத்திய மின்சார ஆணையம் இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். “சூரிய மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது, அனல் மின் நிலையங்களை மூடுவதையோ அல்லது மாலை நேரத்தில் அனல் மின் திறனை இழப்பதையோ நாங்கள் விரும்பவில்லை. எனவே, மின் நிலையங்கள் நிலையாக செயல்படவும், செலவைக் குறைக்கவும், அவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் இந்த பேட்டரி சேமிப்பு வசதிகள் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் நிலக்கரி தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பதை உணர்த்தும் விதமாக, நிலக்கரி மின் உற்பத்தி திறனை வரும் 2035க்குள் மேலும் 97 ஜிகாவாட் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
என்.டி.பி.சி., நிறுவனம், பேட்டரி சேமிப்பு வசதியின் சோதனைக்காக 11 அனல் மின் நிலையங்களில் 1.70 ஜிகாவாட் பேட்டரி சேமிப்பு அமைப்புகளை அமைக்க டெண்டர் வெளியிட்டுள்ளது