'பேட்டரி ஸ்டோரேஜ்' திட்டம் பாக்ஸ்கான் - தமிழக அரசு பேச்சு
'பேட்டரி ஸ்டோரேஜ்' திட்டம் பாக்ஸ்கான் - தமிழக அரசு பேச்சு
ADDED : நவ 28, 2024 01:52 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநல்லுார், 'சிப்காட்' தொழில் பூங்காவில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' திட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, பாக்ஸ்கான்
நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. அங்கு, 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு சமீபத்தில், சென்னை வந்தார். அவர், மின் வாகனங்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, இந்தியாவில், 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்' ஆலை திட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
இந்த முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்க்கும் நடவடிக்கையில், தொழில் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் அமைக்க, திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுார் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காவில், 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு முன்வந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநல்லுாரில், 2,400 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது; பாக்ஸ்கான் மட்டுமின்றி, பல நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது'' என்றார்.