ADDED : ஜூலை 20, 2025 02:06 AM

பெங்களூரு:ராணுவ அமைச்சகம், 157.33 கோடி ரூபாய் மதிப்பில், 79 புல்டோசர்களை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸிடம் ஆர்டர் வழங்கியுள்ளது.
இந்த புல்டோசர்கள், எல்லையோர ராணுவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும், குளிர்பிரதேசங்களில் படர்ந்த பனியை அப்புறப்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளன. இது, எந்த மோசமான வானிலை மற்றும் சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 66 புல்டோசர்களை இந்நிறுவனம், ராணுவ அமைச்சகத்திற்கு வினியோகித்ததை தொடர்ந்து, புதிய ஆர்டரை பெற்றுள்ளது. இந்த வகை புல்டோசர்கள், முழுக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.
இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதி, பெங்களூருவிலும், உற்பத்தி ஆலைகள், கர்நாடகத்தின் மைசூர் மற்றும் கோலார் பகுதியிலும் அமைந்து உள்ளன.